திருமந்திரம் » எட்டாம் தந்திரம் » சுத்த நனவாதி பருவம் » பா_எண்: 2213
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே
‣திரண்டகருத்து :
எதையும் திகைப்புடன் அறியும் சிந்தை ஆகிய ஜீவனுக்குள் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முரட்டுத்தனமான சிங்கங்கள் மூன்று உள்ளன (அவைகளை அடக்க வேண்டும்)
உள்ளே ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுக்கூடிய நெஞ்சுக்குள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நரிக்குட்டிகள் நான்கு உள்ளன
(அவைகளை அடக்க வேண்டும்)
வெளிப் பொருட்களை அனுபவிக்க தூண்டிவிட்டு வகை செய்யும் இந்திரியங்களாகிய கண், காது, மூக்கு, நாக்கு, காயம் என்னும் ஆனைக் கன்றுகள் ஐந்து உள்ளன (அவைகளை அடக்க வேண்டும்)
இப்படி பகைமை தொழில் செய்யும் மனதுக்கு இரண்டு பால் குணம் (விருப்பு, வெறுப்பு) உள்ளது (அவைகளை அடக்க வேண்டும்)