அன்புடையீர்! வம்மின் இங்கே!❤
அ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய
உயர்பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள போதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.
அந்தத் தலைப்பட்ட ஆன்ம இன்ப வாழ்வு
எத்தனை வகை என்று அறிய வேண்டில்:-
என மூன்று வகை என்று அறிய வேண்டும்.
——————————————————————
#1. இம்மை இன்பமாவது:
சிறிய தேககரணங்களைப் பெற்று,
சிறிய முயற்சியால்,
சிறிய விடயங்களை,
சிலநாள் அனுபவிக்கின்ற
இன்பத்தை இம்மை யின்பம் என்றறிய வேண்டும்.
இம்மை இன்ப லாபமாவது:
மனிதப்பிறப்பில் தேகத்திலும் கரணங்களிலும் புவனத்திலும் போகங்களிலும், குறைவின்றி நல்லறிவு
உடையவர்களாய், பசி, பிணி கொலை முதலிய தடைகளில்லாமல், உறவினர், சினேகர், அயலார்
முதலியரும் தழுவ, சந்ததி விளங்கத்தக்க சற்குணமுள்ள மனைவியுடன், விடயங்களைச்
சில நாள் அனுபவிக்கின்றதை
இம்மையின்ப லாபம் என்றறிய வேண்டும்.
—————————————————————–
#2.மறுமை இன்பமாவது:
உயர்பிறப்பில்
பெரிய தேககரணங்களைப் பெற்று,
பெருமுயற்சியால்,
பெரிய விஷயங்களை,
பலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை
மறுமை யின்பம் என்றறிய வேண்டும்.
மறுமை இன்பலாபமாவது:
உயர்பிறப்பைப் பெற்று இம்மை இன்பலாபத்தில் குறிக்கப்பட்ட நற்குணங்களெல்லாம் பொருந்த
உயர் நிலையில் சுத்த விடயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற இன்ப லாபத்தை
மறுமையின்ப லாபம் என்றறிய வேண்டும்.
——————————————————————
#3.பேரின்பமாவது:
எல்லாத் தேகங்களையும்,
எல்லாக் கரணங்களையும்,
எல்லாப் புவனங்களையும்,
எல்லாப் போகங்களையும்,
தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியின் சந்நிதி விசேடத்தால் தோன்றி விளங்க
விளக்கம் செய்விக்கின்ற பூரண இயற்கை உண்மை வடிவினராகிய
கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று,
எக்காலத்தும் – எவ்விடத்தும் – எவ்விதத்தும் – எவ்வளவும் தடைபடாமல்
அனுபவிக்கப்படுகின்ற ஒப்பற்ற அந்தப் பெரிய இன்பத்தைப்
பேரின்பம் என்று அறிய வேண்டும்.
பேரின்ப லாபமாவது:
யாவும் தாமாய் விளங்குவதே.
——————————————————————-
▶️இம்மை இன்பத்தை அடைந்தவர் பெருமை யாது என்று அறிய வேண்டில்:
அன்பு, தயை, ஒழுக்கம், அடக்கம், பொறுமை, வாய்மை, தூய்மை முதலிய
சுபகுணங்களைப் பெற்று விடய இன்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப்
புகழ்பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.
▶️மறுமை இன்ப லாபத்தை அடைந்தவர் பெருமை யாது என்று அறிய வேண்டில்:
அன்பு, தயை முதலிய சுப குணங்களைப் பெற்றுச் சுத்த விடய இன்பங்களை
எண்ணியபடி தடைபடாமல் முயன்று பலநாள் அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.
▶️பேரின்ப லாபத்தை யடைந்தவர் பெருமை எது என்றறிய வேண்டில்:
தோல், நரம்பு, என்பு, தசை, இரத்தம், சுக்கிலம் முதலிய அசுத்தபூத காரியங்களும்
அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி,
மாற்று இவ்வளவு என்றறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும்,
பொன்வடிவாகத் தோன்றுதல் மாத்திரமேயன்றி ஆகாயம் போல் பரிசிக்கப்படாத சுத்தபூதகாரண பிரணவ தேகத்தையும் தோன்றப்படுதலுமின்றி, ஆகாயம் போல் விளங்குகின்ற ஞானதேகத்தையும் பெற்றவர்களா யிருப்பார்கள்.
இவை பேரின்பலாபத்தை அடைந்தவர் பெருமை யென்று அறிய வேண்டும்.
இம்மூவகை இன்ப லாப வாழ்வையும் எதனால் பெறக்கூடுமென்றறிய வேண்டில்:-
“கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளின் ஏகதேசத்தைக் கொண்டும் அருட்பூரணத்தைக் கொண்டும் அடையக் கூடுமென்றும் அறியவேண்டும்”
இம்மூவகை இன்பங்களில்
‘அருளின் ஏகதேசத்தைக் கொண்டு அடையத்தக்கவை எவை?
அருட்பூரணத்தைக் கொண்டு அடையத்தக்கது யாது?’
என்றறியவேண்டில்
என்கின்ற இரண்டையும் அருளின் ஏகதேசத்தைக் கொண்டு அடையக்கூடும் என்றும், பேரின்பலாபம் என்கின்ற ஒன்றையும் அருட்பூரணத்தைக் கொண்டு அடையக்கூடும் என்றும் அறிய வேண்டும்.
கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருள் எந்த வண்ணத்தை உடையது என்றறியவேண்டில்:
ஆகிய சர்வசத்தி வண்ணங்களும் தனது ஏகதேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளங்குகின்ற பூரண விளக்க வண்ணத்தை யுடையது என்று அறிய வேண்டும்.
அந்த அருள் எவ்விடத்து விளங்குகின்ற தென்று அறிய வேண்டில்:
அந்த அருளை எதனால் பெறக்கூடும் என்றறியவேண்டில்:
“ஜீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக்கூடும் என்றறியவேண்டும்”
ஜீவகாருணிய ஒழுக்கத்தினால் அருளைப் பெறக்கூடு மென்பது எப்படி என்று அறியவேண்டில்:
அருள் என்பது கடவுள் இயற்கை விளக்கம் அல்லது கடவுள் தயவு. ஜீவகாருணிய மென்பது ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் அல்லது ஆன்மாக்கள் தயவு. இதனால், ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும், சிறிய தயவைக்கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் கூடும். சிறு நெருப்பைக் கொண்டு பெருநெருப்பைப் பெறுதல்போல என்று அறிய வேண்டும்.
இதனால் ஜீவகாருணிய ஒழுக்கமே சன்மார்க்கம் என்று அறியப்படும்.
ஜீவகாருணியம் விளங்கும்போது அறிவும், அன்பும் உடனாக விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும். ஜீவகாருணியம் மறையும்போது அறிவும், அன்பும் உடனாக நின்று மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத்தீமைகளும் தோன்றும்.
ஆகலில் புண்ணியமென்பது ஜீவகாருணியம் ஒன்றே என்றும்,
பாவமென்பது ஜீவகாருணிய மில்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும். அன்றி, ஜீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகாலறிந்து, அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சத்திய ஞானிகளே மேற்குறித்த பேரின்பலாபத்தைப் பெற்ற முத்தர்களென்றும், அவர்களே கடவுளை அறிவாலறிந்து கடவுள்மயமானவர்க ளென்றும் சத்தியமாக அறியவேண்டும்.
ஜீவகாருணிய ஒழுக்கத்தின் இலக்கணம் என்னென்று அறிய வேண்டில்: ஜீவர்களுக்குச் ஜீவர்கள் விஷயத்தில் பொதுவாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள்வழிபாடு செய்து வாழ்தல் என்று அறியவேண்டும்.
ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்வது எப்படி என்றறியவேண்டில்:
ஜீவர்களுக்குச் ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் – காருணியம் – உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும்; அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும். அவ்வனுபவம் பூரணமாதலே கடவுள்வழிபாடு
என்று அறிய வேண்டும்.
ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள்விளக்கமாகிய அருள் வெளிப்படுவது எப்படி என்று அறியவேண்டில்:
தயிருக்கும், கட்டைக்கும் கடைதலால் நெகிழ்ச்சி உண்டாக உண்டாக அதன்
அதன் உள்ளிருக்கின்ற வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படுவதுபோல் வெளிப்படுமென்று அறியவேண்டும்.
திருவருள் விளங்க அதனால் கடவுள் இன்பம் அனுபவமாகிப்
பூரணமாவது எப்படி என்ற அறியவேண்டில்:
வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படவே அவற்றின் உண்மைத் தன்மை அனுபவமாகிப் பூரணமாவது போல், கடவுள் இன்பம் பூரணமாகும் என்று அறியவேண்டும்.
ஜீவர்களுக்குச் ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது
வெளிப்படும் என்று அறியவேண்டில்:
பசி, கொலை, பிணி, ஆபத்து, தாகம், பயம், இன்மை, இச்சை இவைகளால் ஜீவர்கள் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், கேட்டபோதும், அறிந்தபோதும் ஆன்ம உருக்கம் உண்டாகும் என்று அறியவேண்டும்.
பசி:
பசி என்பது, ஆகாரம் பொறாமையால் வயிற்றினுள் பற்றி நின்று தேகத்தின் அகத்தும், புறத்தும் உள்ள கருவி கரணங்களின் தன்மைகளைச் சுடுதல் செய்து, அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு முதற்காரணமாகிய விகற்ப மாயாகாரியப் பிண்டப்பகுதி நெருப்பு.
கொலை:
கொலை என்பது, தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களைப் பல்வேறு கருவி கரணப் புடைபெயர்ச்சிகளால் பதைப்புண்டாகக் கலக்கம் செய்து, அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாகிய
விகற்ப பூதகாரியக் கொடுந்தொழில்,
பிணி:
பிணி என்பது, வாத, பித்த, சிலேட்டும விகற்பங்களால் மாறுபட்டு,
தேகத்தின் அகத்தும், புறத்தும் உள்ள கருவி கரணங்களை நலிவுசெய்து,
அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாக
நின்ற விகற்ப மாயாகாரியப் பிண்டப் பகுதி வேற்றுமை விளைவு.
ஆபத்து:
ஆபத்து என்பது,
அகங்காரத்தாலும்,
மறதியாலும்,
கரும வேறுபாட்டாலும்
தேகபோக அனுபவங்களைத் தடுக்கின்ற விக்கினங்கள்.
பயம்:
பயம் என்பது, தேக முதலிய கருவிகளுக்கு நட்டம் செய்வதாகிய விடயங்கள் நேரிட்டபோது கரணங்களுக்கும் அறிவுக்கும் உண்டாகின்ற நடுக்கம்.
இன்மை:
இன்மை என்பது, கல்வி, செல்வம் முதலிய கருவிகளைத்
தற்சுதந்திரத்தில் பெறாமை.
இச்சை:
இச்சை என்பது அடையக் கருதிய விடயங்களில் அருமை குறித்து அவற்றை மேன்மேலும் கருதச் செய்கின்ற சித்தவிருத்தி என்று அறியவேண்டும்.
இவற்றுள் பசி, கொலை என்பவை
இம்மை இன்பம், மறுமை இன்பம், பேரின்பம்
என்கிற மூன்றையும் தடுத்தலால் முதற்பட்ட தடை என்றும்;
பிணி, பயம், ஆபத்து, இன்மை என்பவை
இம்மை, மறுமை இன்பங்களைச்
சிறிது தடுத்தலால் இடைப்பட்ட தடை என்றும்,
ஆசை – இம்மை இன்பத்தைச் சிறிது தடுத்தலால்
கடைப்பட்ட தடை என்றும் அறியவேண்டும்.
ஜீவகாருணியத்தின் வல்லபம் யாதென்றறியவேண்டில்:
“பிற உயிர்களிடத்துப் பசி, கொலை முதலியவற்றுள் எதனால் காருணியம் தோன்றியதோ அதனால் அவ்வுயிர்கள் வருந்தாதபடி அதை நீக்குதற்கு
முயல்விப்பது அதன் வல்லபம் என்று அறியவேண்டும்.”
ஜீவகாருணித்தின் பிரயோசனம் யாதென்றறியவேண்டில்:
உயிர்களுக்கு இன்பம் உண்டுபண்ணுவது
அதன் பிரயோசனம் என்று அறியவேண்டும்.
இந்த ஜீவகாருணியத்தின் சொரூப – ரூப – சுபாவ – வியாபக முதலியவைகள் மூன்றாவது பிரிவில் கண்டு கொள்ளப்படும்.
திருச்சிற்றம்பலம்
ஜீவகாருண்ய ஒழுக்கம்
இரண்டாம் பிரிவு முற்றிற்று