நாம் அறிந்தே செய்யும் பாவங்களுக்கான காரணங்கள் என்ன??
மோகம் - Carving Desire
காரணம் :
ஒரு பொருளை அறிய விரும்புவது பற்று (அவா) ஆகும்;
அதை அனுபவிக்க வேண்டும் என்பது ஆசை என்னும் காமம் ஆகும்;
அதைத் தன்வசப்படுத்தியே ஆகவேண்டும் என்று எழுவது மோகம் ஆகும்!
மோகத்தை நாம் எவ்வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது!
தன் சுயநலத்திற்காகத் தன்னிடம் ஒரு பொருளை வசப்படுத்தி வைத்துக் கொள்ள நினைப்பது அறிந்தே செய்யும் பாவம் ஆகும்
உபாயம் :
எந்த பொருளினிடத்தும் மோகம், காமம் முதலியவை இன்றி அவா மாத்திரமாய் இருத்தல் வேண்டும்
நம் விருப்பங்கள் எல்லாம் இறை பாதைக்கூறியதாக இருத்தல் வேண்டும்
நமது ஆசைகள் எல்லாம் மற்ற உயிர்களுக்கு நன்மை செய்யும்
பொருட்டாக இருத்தல் வேண்டும்
மோகத்தை பகைவனாக பார்த்தல் வேண்டும்
மறதி - Forgetfulness
காரணம் :
மனிதர்களாகிய நாம் எப்போதும் நினைப்பு – மறைப்பு உட்பட்டவர்களே நாம் என்பதை எப்போதும் மறக்கக் கூடாது
அதிகம் நேரம் தூங்குவதால் நமக்குள் இருள் உற்பத்தி ஆகிறது அது மறதிக்கு வழி வகுக்கிறது
தாமச ஆகாரமும் மறதிக்குக் காரணமாகிறது
இதன் காரணமாக நாம் எவ்வளவு நல்ல அறிவுரைகள், சத்விசாரம் கேட்டாலும்; அது பாவச் செயல் செய்யும் நேரத்தில் நமக்கு நினைவு வராமல் போகிறது அதனால் நாம் மறதியில் பாவம் செய்து விடுகிறோம்
உபாயம் :
நல்ல நினைவாற்றலை உற்பத்தி செய்யக்கூடிய மூலிகைகள் தினமும் எடுத்துக்கொளல் (கரிசாலை, வல்லாரை, Walnuts)
இரவு விரைந்து தூங்கி அதிகாலையில் அமுதப் பொழுதில் எழுதல்
நல்ல சத்துவ ஆகாரத்தை (Satvic Foods) எடுத்தல்
சூரிய கலையில் சுவாசம் ஓடினால் ஓரளவுக்கு மறதியைத் தவிர்க்கலாம் அதுக்கு நாம் எப்போது படுத்தாலும் இடது பக்கமாகவே படுத்தல் வேண்டும்
அபிமானம் - Affection
காரணம் :
சில சமயம் நாம் சில ஒருவருக்கு மட்டும் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் போது, நாம் அவருக்கு அருகில் இருப்பவர்களுக்கு செய்ய வேண்டிய உதவியினையும், கடமையினையும் மறந்து போகிறோம் அல்லது அலட்சியம் செய்கிறோம்!
இதனால் அந்த ஜீவன் வருத்தத்துக்குள் ஆகிறது ஆகவே அதுவும் ஒரு பாவமாகிறது
உபாயம் :
எல்லாரையும் சரிசமமாகப் பார்த்தல் வேண்டும்!
பெரியோரைக் கண்டு வியத்தலும் கூடாது; சிறியாரைக் கண்டு இகழ்தலும் கூடாது!
யார் மீதும் தனிப்பட்ட அதிக பற்றுத்தல் இல்லாது பழகுதல் வேண்டும்
அகங்காரம் - Arrogance
காரணம் :
அகங்காரமே இந்த உலகில் எல்லாப் பாவங்களுக்கு முக்கிய காரணம் ஆகிறது
நான் ஒரு ஆண், நான் ஒரு பெண், நானே பெரியவன், நான் சொல்லுவதே சரியானது என்று நினைப்பது எல்லாமே அகங்காரம் தான்!
இது போட்டி, பொறாமைக்கு வழிவகுத்து பாவச் செயல்களுக்கு வழி வகுக்கிறது!
உபாயம் :
யான், எனது என்று எந்தவித செறுக்கும் இல்லாது எல்லாம் இறைவன் தந்தது என்று பணிவோடு பணி செய்தல் வேண்டும்
பிறர் நம்மை கோபப்படுத்தினாலும் பொறுத்துக்கொள்ளப் பழகுதல்
எப்போதும் தாழும் குணத்தோடு இருத்தல் வேண்டும்
எல்லாரையும் நம்மவராகப் பார்த்தல் வேண்டும்
செல்வ செருக்கு - Wealthy Haughtiness
காரணம் :
பெரும்பாலான பாவச் செயலுக்குக் காரணம் பணமும், செல்வச் செருக்கும் தான்
செல்வ அதிகம் சேரும் போதும் நமக்கு நம்மை அறியாமலேயே செருக்கு என்பது வரும்! இந்த செருக்கு வருதலால் நமக்குப் புற உலகத்தில் யாரும் தேவை இல்லை; ஏன் இறைவனே கூட தேவையில்லை! இந்தச் செல்வத்தை வைத்து நாம் நினைத்த காரியம் எதுவாயினும், செய்து முடித்துவிடலாம் என்று நினைத்துச் செய்யும் அறச்செயலுமே பாவத்தில் தான் முடியும்!
நம்மிடம் செல்வம் உள்ளது ஆகவே எவரையும் விலைக்கு வாங்கி விட முடியும், எந்தக் குற்றத்தில் இருந்து தப்பித்து விட முடியும் என்று நம்பும் செருக்கே பாவத்திற்குக் காரணம் ஆகிறது
உபாயம் :
தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை கூடிய மட்டில் குறைத்துக்கொண்டு அதை ஜீவகாருண்யச் செயல்களுக்கு உபயோகித்தல் வேண்டும்
நமக்கு வரும் எல்லா செல்வத்தையும் சிவம் தந்தது என்று எப்போதும் எண்ணுதல் வேண்டும்
செல்வ உள்ளதே என்ற திடத்தில் பாவ செயல் செய்யாது இருத்தல்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. (திருக்குறள் – 125) என்றபடி நடத்தல் வேண்டும்
இந்த செல்வ செறுக்கு வராமல் இருக்க அடிக்கடி அருளாளர் நூல்களில் செல்வம் நிலையாமை, அடக்கமுடைமை பகுதியை படித்தல் நல்ல ஒரு உபயாம் ஆகும்
தாட்சண்யம் - Compassion
காரணம் :
தாட்சண்யன் என்றால் கருணை ஆகும்! கருணை செய்தால் எப்படி பாவம்உண்டாகும் என்றால்?
தவறான பாவச் செயல்கள் செய்வோருக்கு கருணை காட்டி அவர் செய்யும் தவறான செயலுக்கு உதவினால் அதுவும் அறிந்தே செய்யும் பாவம் ஆகும்!
மேலும் தவறான அசுத்தமாயா ஆத்மாக்களுக்கு அவைகளின் பழி தீர்க்கும் செயலுக்கும், இச்சையை தீர்க்கும் செயல்களுக்கும் நீங்கள் தயவு தாட்சண்யன் கொண்டு உதவினால் அதுவும் ஒரு பாவம் ஆகும்!
உபாயம் :
பசி, கொலை இந்த இரண்டு விஷியங்களில் எந்த ஜீவர்கள் ஆனாலும் உதவலாம்!
ஆனால் எளிமை, இச்சை, பயம் போன்றவற்றை போக்கும் செயல்களில் நீங்கள் ஒருவருக்கு உதவும் போது மிக கவனமாக உதவ வேண்டும்!
நாம் சுத்த சைவமாக இருந்தும் மற்றவர்களுக்கு இச்சைக்கு அசைவம் சாப்பிட நாம் காசு கொடுத்தாலும் அல்லது அசைவம் வாங்கிக் கொடுத்தாலும் அல்லது அசைவம் செய்துக் கொடுத்தாலும் அதுவும் அறிந்தே செய்யும் பாவம் ஆகும்! ஆகவே அசைவம் சாப்பிடுவதற்கு நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுதலை தவிர்த்துவிடுதல் நல்லது!
உயிர் கொலை செய்வோருக்கு உபகாரம் செய்தேனோ..? என்று மனுமுறை கண்ட வாசகத்தில் பாவங்களில் பட்டியலில் வள்ளல் பெருமான் கூறிப்பிடுகிறார்
மற்ற அசுத்தமாயா சக்திகள் மற்றும் அசுத்தமாயா தெய்வங்களுக்கு சஞ்சலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லாம் வல்லஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை முழுமையாக வணங்கினால் அவைகளின் இடர்பாடுகளில் இருந்து தப்பிக்கலாம்!
உணவு -Food
காரணம் :
ஒரு உயிரை கொன்று நம் நாக்கு ரூசிக்காக கொன்று திண்பது நாம் அறிந்தே செய்யும் பாவங்களில் முதன்மையானது!
மேலும் இருளை உற்பத்தி செய்யக் கூடிய கள், மதுபானம், புகைப்பழக்கம் போன்ற நம் ஆன்மாவிற்கு நாம் செய்யும் பாவம் ஆகும்
அதிக காரமான மற்றும் எண்ணெய்யான உணவுகளை எடுத்துக்கொள்ளுவதால் நமக்குள் ராஜச, தாமச குண மாற்றம் நிகழ்கிறது இதுவே கோவம், காமம் என பல செயலுக்கு வழி வகுக்கிறது
உபாயம் :
நல்ல சுத்த சத்துவ உணவுகளை எடுத்தல்
கள், மதுபானம், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை அறவே தவிர்த்தல் வேண்டும்
அசைவத்தை எந்த காரணத்தைக் கொண்டு எடுத்துக்கொள்ளாது இருத்தல் வேண்டும்
தேவையான அளவு காரம் மற்றும் எண்ணெய்யை அளந்து உபயோகித்தல் வேண்டும்
புகழ் - Fame
காரணம் :
புகழ்ச்சி என்பது ஒரு மிகப் பெரிய போதை ஆகும்
சிலர் தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளுவதற்காக அதிகம் செலவு செய்து சில காரியங்களை செய்வார்கள் இதற்கு பெயர் தான் ”டம்பம்” பயனற்ற பகட்டுச் செயல்களும் பாவத்திற்கு வழிவகுக்கும்
தயவு நோக்கம் இல்லாது செய்யப்பட்டும் எல்லா காரியங்களுமே வெறும் மாயாஜால செயல்கள் தான் என்று வள்ளல் பெருமான் கூறுகிறார்!
புகழ்ச்சியும் ஒரு மாயை தான்!
உபாயம் :
எப்போதும் தாழும் குணத்தில் இருத்தல் வேண்டும்
நமக்கு வரும் எல்லா பெருமைகளையும் மனதளவில் இறைவனுக்கே சமர்ப்பணம் செய்தல் வேண்டும்
தன்னை தானே ஒரு பெருமை மிகுந்த ஆளாக மதியாது இருத்தல் வேண்டும்
புகழ்ச்சி பட்டங்கள் மற்றும் அங்கீகரிப்புகளை எதிர்பாராது இருத்தல் வேண்டும்
வழக்கம் - Long Habits
காரணம் :
இது பழக்க தோஷத்தினால் வரும் பாவம் ஆகும்
முன்பு நாம் நெடுநாள் அறியாமல் செய்து வந்த செயல் பாவம் என்று தெரிந்தவுடன் மாற்றிக்கொள்ள முயற்சி செய்தாலும், அந்த செயலை நாம் அதிக காலம் செய்து பழகிவிட்டதனாலும், அது ஒரு பழக்க வழக்கமாக நமக்குள் பதிவாகிவிட்டதனாலும் நாம் அந்த பாவத்தைச் செய்கிறோம்!
உபாயம் :
செய்கின்ற செயலை முழுவிழிப்புடன் செய்தல் வேண்டும்
அதற்கு உபாயம் எப்போதும் புருவ மத்தியில் ஆண்டவரை நினைந்து பணிசெய்தல் வேண்டும்
நம்மை நாமே எப்போதும் ஒரு மூன்றாவது மனிதனாக நம் செயலை உற்று நோக்கி சரிபார்த்தல் வேண்டும்